கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதி பற்றி ஓர் இதிகாச வரலாறு சொல்லப்படுகிறது.

 

மகாபாரதக் காலத்தில் வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், காடுமேடெல்லாம் கடந்து வந்து, மகாலிங்க மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். நடந்த களைப்பு நீங்க நீராட விரும்பினார்கள். ஆனால், நீராடுவதற்கு அங்கே அருவியோ அல்லது நதியோ இல்லை. எனவே அர்ச்சுனன் பூமி தேவியையும், கங்கையையும் வணங்கி, தன் அம்பால் பூமியைப் பிளந்தான். அந்தப் பிளவில் இருந்து தோன்றியதே அர்ச்சுனா ஆறு.

மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா ஆற்றின் வரலாறு இதுவென்றால், கோயிலுக்குத் தெற்கில் ஓடும் வைப்பாறுக்கும் ஒரு கதை உண்டு.

ராவணனை சம்ஹாரம் செய்வதற்காக தன் பரிவாரங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார் ராமர். நடந்த களைப்பு தீர நீராட விரும்பினார். ஆனால், நதியோ அருவியோ இல்லை என்பதால் என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். அப்போது அவருடன் வந்த ஒருவன், அகத்திய முனிவர் உலகத்து புண்ணிய தீர்த்தங்களை எல்லாம் ஒரு குடத்தில் அடைத்து, அந்த இடத்தில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினான். அதைக் கேட்ட ராமபிரான், குடம் புதைக்கப்பட்ட இடத்தைத் தன் அம்பால் துளைத்தார். உடனே புதைத்து வைத்திருந்த குடத்தில் இருந்து ஓர் ஆறு தோன்றியது. வைப்பு என்றால் புதையல், புதைத்து வைத்தல் என்று பொருள். புதையலில் இருந்து தோன்றியதால், அந்த ஆறு வைப்பாறு என்னும் பெயரினைப் பெற்றது. இந்த வைப்பாறு இருக்கன்குடியில் அர்ச்சுனா நதியுடன் கலக்கிறது.

திரேதாயுகத்தில் ராமபிரானாலும், துவாபரயுகத்தில் அர்ஜுனனாலும் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆறுகளும் இரண்டு கங்கைகளுக்கு நிகராகச் சொல்லப்பட்டு, அதன் காரணமாக ஊருக்கு இரு கங்கைக்குடி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அந்தப் பெயரே மருவி தற்போது இருக்கன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதிகாசப் பெருமை கொண்ட இந்தத் தலத்தில் அம்மன் கோயில் கொண்டதன் பின்னணியில் சித்தர் ஒருவரின் தவம் அமைந்திருக்கிறது. மதுரைக்கு அருகில் உள்ள சதுரகிரி என்னும் மலையில் சித்தர் ஒருவர் அம்பிகையை தரிசிக்க விரும்பித் தவம் இருந்தார். அப்போது அம்பிகை அசரீரியாக அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாற்றுக்கு நடுவில் இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வரும்படி அருள்மொழி கூறினாள். அதன்படியே இப்பகுதிக்கு வந்த சித்தருக்கு அம்பிகை தரிசனம் தந்தாள். தனக்கு அம்பிகை தரிசனம் தந்த கோலத்திலேயே ஒரு விக்கிரகம் வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் அம்மனின் சிலை ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில் பசுமாட்டின் சாணம் சேகரிக்கும் ஒரு சிறுமியின் மூலம் அம்மன் வெளிப்பட்டு, கலியின் துன்பங்கள் தீர கோயில் கொண்டாள் மாரியம்மன்.

மாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள்.

இங்கே அம்மன் வலக் காலை மடித்து, இடக் காலை தொங்கவிட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்

பிரார்த்தனைச் சிறப்புகள்:

குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

கோயில் பிராகாரத்தில் வடக்கு வாசல் செல்வி, வெயிலுகந்த அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி அம்மன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

கோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை தொடர்ந்து திறந்திருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s