வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்

இந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன.

அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கண்குடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி என்ற இடத்தில் உள்ள இக்கோயில், சிறியதாக இருந்தாலும் பெரும் புகழ் பெற்று விளங்கி வருகிறது.

திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக சாத்தூரிலிருந்து நேர் கிழக்கே அருப்புக் கோட்டை வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இருக்கண்குடி மாரியம்மன் கோயில்.

தல வரலாறு :

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் திண்டாடினாள். கூட்டம் கூடியது. அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே நிலைநாட்டி வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.

அங்ஙனமே கிராம மக்கள் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு தற்போதுள்ள அம்மன் திருவுருவத்தைக் கண்டெடுத்தனர். அச்சிலையை ஊருக்குள் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டார்கள்.

மூன்று தினங்களில் மீண்டும் அச்சிறுமியின் மீது அருள் வந்து, தான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது என்றும், தூய்மையைக் கடைபிடிக்கும் பொருட்டு தனது திருஉருவத்தை பூமியைத் தோண்டி முன்பு எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் வைத்து வழிபடுங்கள் என்று கூறினாள். இதைத்தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோயில் அமைந்து உள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். அதுமுதல் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு திருக்கோயில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதன் ஞாபகார்த்தமாக அம்மனின் உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது. இருக்கண்குடி கோயிலுக்கு தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

தல அமைப்பு :

கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொண் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது.

பிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் அனiத்தும் நிறைவேறுகின்றன.

தலச் சிறப்பு :

குறை நிவர்த்தி வேண்டி திருக்கோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்த்தங்கள் :

வைப்பாறு, அர்ச்சுனா ஆறு

திருவிழாக்கள் :

இடுக்கண் களையும் இருக்கண்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கண்குடியில் கூடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.

தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கண்குடி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s